வேட்புமனுவில் தவறான தகவல்..? இபிஎஸ்-ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்புமனுவின் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பை தவறாகத் தெரிவித்துள்ளதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்ற வாக்காளர் ஒருவர் சேலம் தனிநபர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநபர் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். புகார்தாரர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் இதற்காக, சொத்து பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி மே 26ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :