கஞ்சா கடத்திய சமையலர் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 39). இவர் சேலம் மத்திய சிறையில் சமையலராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை பணியில் இருந்த அவர், சாப்பாட்டு கஞ்சி வடிப்பதற்கு தேவையான சவுக்கு மரம் மற்றும் நூல் கயிறு ஆகியவற்றை எடுத்து வருவதாக நுழைவு வாசலில் உள்ள பாதுகாப்பு காவலரிடம் கூறிவிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியில் சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு சிறைக்கு வந்த அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது அவர் உள்ளாடையில் கருப்பு நிறத்தில் 'டேப்' சுற்றி அதில் கஞ்சா மறைத்து கடத்தியது தெரியவந்தது. உடனே சிறை வாசலில் காவலில் இருந்த போலீசார், மத்திய சிறை அலுவலர் மதிவாணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சிறையின் நுழைவு பகுதிக்கு வந்து தனபாலிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர் மதிவாணன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சிறைக்குள் கஞ்சா கடத்தி வந்ததாக சமையலர் தனபாலை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இந்த நிலையில் கஞ்சாவை சிறைக்குள் கடத்தி வந்ததாக தனபாலை பணி இடைநீக்கம் செய்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன் நடவடிக்கை எடுத்து உள்ளார். கஞ்சா கடத்த முயன்ற சம்பவத்தை அடுத்து, சிறைத்துறை டி. ஐ. ஜி. சண்முகசுந்தரம், நேற்று சேலம் மத்திய சிறைக்கு திடீரென வந்து ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :