சட்டமன்ற நூற்றாண்டு விழா:  ஜனாதிபதியை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு

by Editor / 19-07-2021 04:47:10pm
 சட்டமன்ற நூற்றாண்டு விழா:  ஜனாதிபதியை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு


டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சந்தித்தார். அப்போது தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு வருகை தருமாறு ஜனாதிபதிக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.


தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, முதல் முறையாக கடந்த மாதம்  டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் வழங்கினார். மறுநாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.


இந்த நிலையில், 2வது முறையாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் துர்கா ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் சென்றனர்.டெல்லி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல ஆணையர் ஜக்மோகன்சிங் ராஜு மற்றும் எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். மு.க. ஸ்டாலின் டெல்லியில் தங்கினார்.


திங்கள்  மதியம் 12.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு உடனிருந்தார்.
அப்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்றதற்கு ஜனாதிபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஜனாதிபதியை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:
தமிழக சட்டசபை அமைந்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன்.சட்டமன்ற வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருபப்படம் திறக்கப்பட உள்ளது. இதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் மற்றும் கிண்டியில் அமையவுள்ள புதிய மருத்துவமனை ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி அமைக்கப்படவுள்ள நினைவுத்தூண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருகை தருமாறு கோரிக்கையை முன்வைத்தேன். எனது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.


நீட் தேர்வு, மேகதாது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. ஏற்கனவே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம்.


3வது அலை உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம்.ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு கூறினார்.

 

Tags :

Share via