ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்க தடை

by Editor / 21-07-2021 08:46:48am
ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்க தடை

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:

சில நியாயவிலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தவிர்க்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து பணிபுரிவதால் அவர்கள் தொடர்புடைய வெளிநபர்கள் கடைகளில் இருந்து அங்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவித்தவாறு நியாயவிலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. மூன்றாண்டுகளுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக்கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

2. நியாயவிலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் நியாயவிலைக்கடைகளில் காணப்படின் இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3. வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. மண்டல இணைப்பதிவாளர், சரக துணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பொவிதி) ஆகியோர் தங்களது ஆய்வுக்கூட்டங்களின் போது இதனை ஒரு பொருளாகக் கொண்டு விவாதித்து, தேவைப்படும் இடங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5. இவ்வறிவுரைகளுக்கு பின்னரும் நியாயவிலைக்கடைகளில் வெளி நபர்கள் காணப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் இதற்கு சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளரே பொறுப்பு என கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரத்தினை அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் தெரியப்படுத்தி இதனைத் தொடந்து கண்காணித்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, கூட்டுறவுத்துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via