மல்பெரி நாற்றுகள் கிடைக்காமல் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு
ஒருமுறை நடவு செய்வதன் வாயிலாக 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து இலைகள் அறுவடையும் செய்யப்படுகிறதுஉடுமலை சுற்றுப்பகுதியில் மல்பெரி சாகுபடியின் வாயிலாக பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. கூடு உற்பத்தியில் வைக்கப்படும் புழுக்களுக்கு மல்பெரி செடியின் இலைகளே முக்கிய உணவாகும்.
இதற்கென மல்பெரி நாற்றுகள் ஒட்டுக்கட்டும் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யப்படுகிறது.ஒருமுறை நடவு செய்வதன் வாயிலாக 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து இலைகள் அறுவடையும் செய்யப்படுகிறது. அதேபோல் கூடு உற்பத்தியின் போது 40 நாட்களுக்கு ஒருமுறை உணவுக்காக இலைகள் அறுவடை செய்யப் படுகின்றன. குறைந்தளவு தண்ணீரிலும் சாகுபடி, சீரான விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் சிலர் பட்டுக்கூடு உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் போதியளவு தண்ணீர் கிடைக்கப்பெறாத போது சாகுபடி செய்யப்படும் மல்பெரி நாற்றுகள் பட்டுப்போய் விடுகின்றன. பட்டுப்புழுக்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் கூடு உற்பத்தியும் பாதிக்கிறது.தற்போது மழையின் தாக்கம் காணப்படுவதால் விவசாயிகள் மீண்டும் பட்டுக்கூடு உற்பத்தியை தொடங்கியுள்ளனர். மேலும் பட்டுப்போன மல்பெரி நாற்றுகளை அகற்றி புதிய நாற்றுகளை நடவு செய்யவும் முயற்சிக்கின்றனர். போதிய அளவில் மல்பெரி நாற்றுகள் கிடைக்கப்பெறாமல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டுவளர்ச்சித்துறையால் மல்பெரி நாற்றுகள் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :