அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை.

by Editor / 23-08-2023 08:41:11am
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை.

கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் இந்த வழக்கில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதேபோல, 2006 – 11 ம்  ஆண்டு திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர்  நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை  ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த இரு வழக்குகளும் இன்று காலை முதல் மற்றும் இரண்டாவது வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு

Share via
Logo