மகாராஷ்டிரா மழை, நிலச்சரிவுக்கு 136 பேர் பலி
மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மீட்பு பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
அதுபோலவே மழை, வெள்ளத்தில் சிக்கிய ஒரு லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட ங்களுக்கு தொடர்ந்து மீட்புக்குழுவினர் அனுப்பட்டு வருகின்றனர். மழை, வெள்ளத்தால் சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது. 6 மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மண்ணில் புதையுண்டவர்களில் 36 பேரின் உடல்கள் முதல்கட்டமாக மீட்கப்பட்டன. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ராய்காட், ரத்னகிரி, சிந்து துர்க், புனே, சத்தாரா, கோலாப்பூர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.
தெற்கு கோலாவில் தூத்சாகர் சோனலிம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகள் ரெயில் இன்று (சனிக்கிழமை) தடம் புரண்டது.
புனேயில் 84,452 பேரும், கோலாப்பூரில் 40,000 பேரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 54 கிராமங்கள் முழுதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 821 கிராமங்கள் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. 10 மாநில நெடுஞ்சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 39 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.சாங்க்லி மாவட்டத்தில் 36,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோலாப்பூர் பன்ஹாலா சாலையில் கர்நாடக அரசின் பஸ் ஒன்று தண்ணீரில் சிக்கியது. அதிலிருந்து 25 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்திருக்கிறார்.
Tags :