5 வயதுக்கு உட்பட்ட 9 லட்சம் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து காக்க குழந்தைகளுக்கு ‘நியூமோ கோக்கல்’ தடுப்பூசி செலுத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ‘நியூமோ கோக்கல்’ தடுப்பூசி செலுத்தும் பணி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான துவக்க விழா எழும்பூர் மருத்துவமனையில் நடைபெற்றது. இத்திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
இந்த தடுப்பூசியானது குழந்தைகளுக்கு மூன்று முறை செலுத்தப்பட வேண்டும். ஒன்றரை மாதத்தில் முதல் தடுப்பூசியும் மூன்றரை மாதத்தில் இரண்டாம் தடுப்பூசியும் 9 வது மாதத்தில் 3 வது தடுப்பூசியும் செலுத்த வேண்டும். இந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தலாமா? செலுத்தக் கூடாதா? என்பது குறித்து இந்திய மருத்வ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுப்பும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.
இந்த தடுப்பூசி எந்த தேதியில் செலுத்த வேண்டும் என்பது போன்ற விவரங்கள் குறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தமிழகத்தில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவைப்படுகிறது.
இந்த தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வரும் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி வர வர பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு தினந்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.
இந்தியாவில் 21 மாநிலங்களில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இப்பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர்.
இதுவரை இத்தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளிலேயே செலுத்தப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Tags :