குமரியில் மழை நீடிப்பு- 1,500 குளங்கள் நிரம்பியது

by Admin / 25-07-2021 03:19:54pm
குமரியில் மழை நீடிப்பு- 1,500 குளங்கள் நிரம்பியது



குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவில், முள்ளாங்கினாவிளை, இரணியல், குளச்சல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது.

மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறையாறு, வள்ளியாறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகிறார்கள். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.13 அடியாக இருந்தது. அணைக்கு 1,044 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.86 அடியாக உள்ளது. அணைக்கு 801 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று காலை 22.50 அடியாக உள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர் மழைக்கு மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிள்ளியூர் தாலுகா பகுதியில் ஒரு வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

Tags :

Share via