தமிழக அரசிற்கு அறிவுரை வழங்க காசிவிஸ்வநாதருக்கு மனு கொடுத்த விநாயகர்.

by Editor / 16-09-2023 11:07:50pm
தமிழக அரசிற்கு அறிவுரை வழங்க காசிவிஸ்வநாதருக்கு மனு கொடுத்த விநாயகர்.

தென்காசியில் நடைபெற்ற நூதன போராட்டத்தால் பரபரப்பு.

விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 18ஆம் தேதி நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சூழலில், அதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது முதல் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் பக்தர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 304 சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு முன்பு சிலை வைத்து வழிபடவும் காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

குறிப்பாக, பாரம்பரியமிக்க இந்த காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு முன்பு வைக்கப்படும் விநாயகர் பிரதிஷ்டையை வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மறுநாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதிஷ்டை கரைப்பது வழக்கம்.

 ஆனால், இந்த வருடம் வழக்கமாக பிரதிஷ்டை வைக்கும் நாளுக்கு முன்னரே விநாயகர் சிலைகளை வைக்க இந்து முன்னணியினர் ஏற்பாடு செய்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில், இந்து முன்னணியினர் 10க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து விநாயகர் உருவ வடிவிலான முக கவசங்களை அணிந்தபடி விநாயகர் பாடல்களை பாடி காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகை தந்து விநாயகர், காசி விஸ்வநாதருக்கு மனு அளிப்பது போன்று உண்டியலில் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக, அந்த மனுவில் 'எனது பிறந்தநாளை கொண்டாட தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது எனவும், அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து எனது பிறந்த நாளை சுதந்திரமாக கொண்டாட அவர்களுக்கு ஆசி வழங்குங்கள் என விநாயகர் அவரது தந்தையான காசிவிஸ்வநாதருக்கு மனு அளிப்பது போல் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்து முன்னணியினர் நடத்திய இந்த நூதன மனு போராட்டத்தால் காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தமிழக அரசிற்கு அறிவுரை வழங்க காசிவிஸ்வநாதருக்கு மனு கொடுத்த விநாயகர்-

Share via