இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 39,361 பேருக்கு தொற்று

by Admin / 26-07-2021 02:12:12pm
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 39,361 பேருக்கு தொற்று


இந்தியாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
 
நாடு முழுவதும் இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 262 ஆக உயர்ந்தது.

கடந்த ஒரு வாரத்தில் 2.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினசரி பாதிப்பு சுமார் 38 ஆயிரமாக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் சராசரி 38,548 ஆக இருந்தது.

இதன்மூலம் ஒரு வார பாதிப்பு 1.2 சதவீதம் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. முந்தைய வாரங்களில் ஒரு வார பாதிப்பு 6.5, 5.5 சதவீதம் வரை குறைந்திருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் வெறும் 1.2 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

இதற்கு கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு அதிகரித்தது முக்கிய காரணமாகும்.

அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 17,466 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த 7 நாட்களில் மட்டும் 1.10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தை விட 15.7 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 7 வாரங்களில் ஒரு மாநிலத்தின் ஒரு வார மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது இல்லை. ஆனால் கேரளாவில் இந்த வாரம் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாடு முழுவதுமான ஒரு வார பாதிப்பில் 41 சதவீதம் கேரளாவில் மட்டும் ஏற்பட்டிருப்பதும் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 123, கேரளாவில் 66 பேர் உள்பட நேற்று 416 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,20,967 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,31,552, கர்நாடகாவில் 36,374, தமிழ்நாட்டில் 33,911, டெல்லியில் 25,043, உத்தரபிரதேசத்தில் 22,750 பேர் அடங்குவர்.

இதற்கிடையே, நோயின் பிடியில் இருந்து மேலும் 35,968 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 79 ஆயிரத்து 106 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.08 லட்சத்தில் இருந்து 4.11 லட்சமாக உயர்ந்தது.

இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,99,874 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 43.51 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 11,54,444 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 45.74 கோடியாக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via