சொத்து பிரச்சினையில் மீனவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.

by Staff / 06-10-2023 02:40:47pm
சொத்து பிரச்சினையில் மீனவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.

கன்னியாகுமரி அருகே உள்ள கீழ மணக்குடி பழைய கோவில் தெருவை சேர்ந்தவர் டீசன் என்ற பொன்கலாக் கிலேசியா (வயது 60), மீனவர் இவருடைய சகோதரி மல்லிகாவும், அவரது கணவரும் இறந்து விட்டனர். இறந்த மல்லிகாவுக்கு தினேஷ்குமார் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ராதிகா தனது கணவரான பிரபு (31) என்ற ஜெரால்டு பிரபுவுடன் கீழ மணக்குடி ஆர். யு. சி. காலனியில் வசித்தார். தினேஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாயார் மல்லிகா வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே ராதிகாவின் கணவர் பிரபு தனது மனைவிக்கு மாமியாரின் வீட்டை எழுதி கொடுக்கும் படி தினேஷ்குமாரிடம் கேட்டு வந்தார். இதுதொடர்பாக பிரபுவுக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தினேஷ்குமாருக்கு ஆதரவாக அவரது தாய்மாமன் டீசன் இருந்துள்ளார். இதனால் டீசனுக்கும், பிரபுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 15-6-2011 அன்று பிரபு, தனது சகோதரர் ராஜ் என்ற ஸ்டாலின் ராஜ் (41) உள்பட 5 பேருடன் டீசனின் வீட்டிற்கு சென்றார். பின்னர் சொத்து பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என கூறி டீசனை வீட்டின் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, ராஜ் தரப்பினர் டீசனை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த டீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தார். இந்த கொலை தொடர்பாக பிரபு, ராஜ் உள்பட 5 பேர் மீது தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பிரபு, ராஜ் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததோடு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டார். மீதமுள்ள 3 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.

 

Tags :

Share via