பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை

by Staff / 11-10-2023 04:23:32pm
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை

திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியது:  எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்பியைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்துக்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். " இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via