அதிமுக முன்னாள் எம். எல். ஏ. குமரகுருவிற்கு முன் ஜாமீன்
கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம். எல். ஏ. குமரகுரு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குமரகுரு தரப்பில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோரியதாக கூறி, அதுதொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையேற்று குமரகுருவிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதால், இந்த புகாரை வாபஸ் பெறலாம் என பரிந்துரை செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் தொடரபட்ட அவதூறு வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கொள்கை முடிவு என்ற அடிப்படையில் அவற்றை வாபஸ் பெறுவதே வழக்கமாக உள்ளதால், இந்த பரிந்துரையை வழங்குவதாகவும், விளக்கம் அளித்துள்ளார்.
Tags :



















