நூதன முறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி போலீசார் தேடல்

by Staff / 26-10-2023 05:01:20pm
நூதன முறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி  போலீசார்  தேடல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டி ஊராட்சி வள்ளிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் (வயது 27). அவரது மனைவி அஞ்சலி (26). இவர், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கினார். இந்தநிலையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கிடைத்த ரூ.40 ஆயிரம் கடன் தொகை, அஞ்சலியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை எடுப்பதற்காக தனது கணவர் ராஜ்குமார், 2 குழந்தைகளுடன் அஞ்சலி நேற்று காலை வங்கிக்கு வந்தார்.

அங்கிருந்த அதிகாரிகள், வங்கியின் முன்பு உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுத்து செல்லுமாறு அஞ்சலியிடம் கூறியுள்ளனர். அஞ்சலிக்கு சமீபத்தில் புதிய ஏடிஎம் கார்டு வந்திருந்தது. அது 'ஆக்டிவேஷன்' செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து ஏடிஎம் மையத்துக்கு அஞ்சலி, தனது புதிய கார்டுடன் சென்றார். அவரது கணவரும், குழந்தைகளும் வெளியே நின்று கொண்டிருந்தனர்.உள்ளே சென்ற அஞ்சலி புதிய ஏடிஎம் கார்டை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் நின்றிருந்தார். அப்போது, ஏடிஎம் மையத்திற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அஞ்சலியிடம் ஏடிஎம் கார்டை 'ஆக்டிவேஷன்' செய்து பணத்தை எடுத்து தருவதாக கூறினார். இதை நம்பிய அஞ்சலி, ஏடிஎம் கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கார்டு ஆக்டிவேஷன் செய்யப்பட்டது.

பின்னர் அந்த வாலிபர், அஞ்சலியின் கார்டை அவர் வைத்து கொண்டார். அதற்கு பதிலாக, தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் கார்டு ஒன்றை அஞ்சலியிடம் கொடுத்தார். அஞ்சலியும், அதனை தனது கார்டு தான் என்று நினைத்து வாங்கியுள்ளார். அதன்பின் ஏடிஎம்-மில் பணம் எடுக்க, வங்கியில் ஒரு ஓ.டி.பி. எண் தருவார்கள். அதனை வாங்கி வாருங்கள் என்று அஞ்சலியிடம் அந்த வாலிபா் கூறினார். இதை நம்பிய அஞ்சலி வங்கிக்கு சென்றார். இதே வேளையில் அந்த வாலிபரும் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையே வங்கிக்கு சென்ற அஞ்சலி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அஞ்சலி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த வாலிபர் தன்னிடம் கொடுத்த கார்டு தன்னுடையது அல்ல என்பதை அறிந்தார். உதவி செய்வது போல நடித்து, அந்த வாலிபர் நூதனமுறையில் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தனக்கு தெரிந்தவரிடம் வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்துவதற்காக, சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கியதாகவும், அந்த தொகையும் பறி போய் விட்டதே என்று வங்கியின் முன்பு அஞ்சலி கதறி அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், வேடசந்தூர் சாலைத்தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் அஞ்சலியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை அந்த வாலிபர் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த நபரின் புகைப்படத்தை ஆய்வு செய்தனர். அதில், அவரது உருவம் பதிவாகி இருந்தது. அதனை அஞ்சலியிடம் காட்டினர். அவரும், அந்த நபர் தான் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர் என்று அடையாளம் காட்டி உள்ளார். அந்த புகைப்படத்தை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via