ஊர்வலங்களை நடத்தியே தீருவோம்- ஆர்எஸ்எஸ் திட்டவட்டம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தியே தீருவோம் என்று ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், தமிழக உள்துறை செயலாளர் ஆகிய அதிகாரிகளின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து வழக்கறிஞர்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அணிவகுப்பு ஊர்வலத்திற்கான அனுமதியைப் பெற ஆர்எஸ்எஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்ற ஆண்டு தமிழகத்தில் மிகக் கட்டுப்பாட்டோடும், குறித்த நேரத்திலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்ததை கண்ட பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள் என்பது உண்மை. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான ஊர்வலத்துக்கு உரிய அனுமதி பெற்று விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :