திருக்குறுங்குடி நம்பி கோவிலில் காட்டாற்று வெள்ளம் : சிக்கிய பக்தர்கள் மீட்பு

by Editor / 16-10-2021 05:35:03pm
திருக்குறுங்குடி நம்பி கோவிலில் காட்டாற்று வெள்ளம் : சிக்கிய பக்தர்கள் மீட்பு

 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பி கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமையொட்டி சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தனர் அவர்களை காவல்துறையினர், வனத்துறையினர் மீட்டனர்.
வள்ளியூர் அருகே திருக்குருங்குடி  மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் திருக்கோவில் ஆன திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் சென்று வழிபடுவது வழக்கம் . கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பகுதி வழியாக ஆறுகளைக் கடந்து தான் செல்ல வேண்டும்.


இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்பி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை தற்போது நோய்த்தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது கோவில்கள்  பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கலாம் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர் .


கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நம்பி கோவிலுக்கு சென்றனர் இந்நிலையில் காலையிலிருந்து வள்ளியூர், களக்காடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக திடீரென நம்பி கோவில் செல்லும் பாதையில் உள்ள காட்டாற்றில்  கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் காவல்துறையினர் , வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி கோட்ட ஆட்சித்தலைவர் சிவா கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார் மேலும் விரைந்து பக்தர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.
 கோவிலுக்கு செல்லும் வழியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பக்தர்கள் பெரும்பாலும் மீட்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு சென்றவர்கள் வெள்ளம்  குறைந்த பின்பு மலையிலிருந்து கீழே இறங்க முடியும் என்பதால் அவர்களை அங்கு பத்திரமாக இருக்க  வனத்துறையினர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அறியுறுத்தியுள்ளனர்.

 

 

Tags :

Share via