பட்டாசு வெடிக்க தடை நீக்கம் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்றார் ராஜஸ்தான் முதலமைச்சர்

by Editor / 16-10-2021 05:10:47pm
பட்டாசு வெடிக்க தடை நீக்கம் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்றார் ராஜஸ்தான் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதத்திற்கு இணங்க, ராஜஸ்தான் மாநிலத்தில் வெடி வெடிப்பதற்கான தடையை நீக்கி அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தீபாவளி என்றாலே பட்டாசுதான். கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளிக்கு, பட்டாசு தயாரிக்கும் பணிகளில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இத்தொழிலை நம்பிதான் இருக்கிறது.
ஆனால் சில மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி மேற்கூறிய மாநிலங்களுக்கு மு.க. ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 15) கடிதம் எழுதியிருந்தார்.


அக்கடிதத்தில், “பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார்.


அதற்கேற்ப ராஜஸ்தான் மாநிலத்தில், பசுமை பட்டாசுக்கான தடையை நீக்கி அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இரவு 11.55 முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via