நள்ளிரவில் வரும் ரயில்களுக்கு தவறான பயணத் தேதியுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம்
ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், கீழ் வகுப்பு பயண சீட்டு வைத்து மேல் வகுப்பில் பயணிப்போர், ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான சிறு குழந்தைகளுக்கு பயண சீட்டு இல்லாமல் பயணிப்பது, அளவுக்கு அதிகமான உடைமைகளை எடுத்துச் செல்வது, ரயிலில் மற்றும் ரயில் நிலையத்தில் புகைபிடிப்பது, அசுத்தம் செய்வது ஆகிய செயல்களை தடுப்பதற்காக பயணச்சீட்டு பரிசோதகர்கள் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிதியாண்டில் கடந்த ஏழு மாதங்களில் நடைபெற்ற பயண சீட்டு பரிசோதனையில் கடந்த 25 ஆம் தேதி வரை பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடமிருந்து ரூபாய் 5.40 கோடி அபராதமாக மதுரை கோட்டம் நிர்வாகம் வசூலித்துள்ளது.இதுவரை சராசரி மாத பயணச்சீட்டு பரிசோதனை மூலம் வருமானம் 78 லட்சம் மட்டுமே இருந்துவந்த நிலையில் தற்போது அந்த அபராதம்தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில்களில் தவறான பயணத் தேதியுடன் கூடிய முன்பதிவு பயண சீட்டுடன் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டு இல்லாதவர்களாக கருதப்பட்டு பயண கட்டணத்துடன் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் பயண கட்டணத்துடன் குறைந்தபட்ச அபராதமாக ரூபாய் 250 அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அக்டோபர் மாத பண்டிகை காலத்தில் ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர் அவர்களுக்கு உதவுவதற்காக சென்னை - குருவாயூர் - சென்னை விரைவு ரயில்கள், சென்னை - மதுரை - சென்னை வைகை விரைவு ரயில்கள், பாலக்காடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில்கள் ஆகியவற்றில் சிறப்பு பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு பயணித்து வருகிறது. இந்தக் குழு முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவில்லாத பயண சீட்டுகளுடன் பயணம் செய்யும் பயணிகளை பொது பெட்டிகளுக்கு சென்று பயணிக்கும்படி அறிவுறுத்துகிறது. இதன் மூலம் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிகள் எந்த இடையூறும் இன்றி பயணிக்கின்றனர். மேலும் முன்பதிவு இல்லாத பயண சீட்டு எடுக்கும் பயணிகளுக்கு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், அலைபேசி செயலிகள், கியூ ஆர் கோட் மூலம் பயணிச்சிட்டு எடுக்கும் வசதி ஆகியவை அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களில் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க உதவும் வகையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags : நள்ளிரவில் வரும் ரயில்களுக்கு தவறான பயணத் தேதியுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம்