மோட்டார் சைக்கிளை திருட முயன்ற சிறுவன்-பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி எம்.ஏ.நகரில் மளிகை கடை வைத்திருப்பவர் மகேந்திரன் (வயது 52). இவர் சம்பவத்தன்று தனது கடையில் இருந்தார். கடைக்கு வெளியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் 16 வயது மதிக்கதக்க சிறுவன் நைசாக வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து கொண்டிருந்தான். ஆனால் பூட்டு உடைபடவில்லை. தொடர்ந்து பூட்டை உடைக்க சிறுவன் முயற்சித்து கொண்டிருந்தான். இதை கடைக்காரர் மகேந்திரன் தொடர்ந்து கவனித்து கொண்டே இருந்தார். பின்னர் பூட்டை உடைக்கும் தருவாயில் மகேந்திரன் திடீரென சத்தம் போட்டார். இதனை கேட்டதும் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த சிறுவன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருப்பூர் முதன்மை நடுவர் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவையில் உள்ள கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டான்.
Tags :