உசிலம்பட்டி அருகே கஞ்சா கும்பல் சிக்கியது- பெண் உள்பட 8 பேர் கைது

வத்தலகுண்டு சாலையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. பஸ், ரெயில் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், டாஸ்மாக் மதுக்கடை போன்ற இடங்களில் சமூக விரோதிகள் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சாவால் இளைய சமுதாயத்தினர் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. கேரளா, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும் இப்பகுதியை சேர்ந்த கும்பல் அதனை நைசாக விற்று பணம் பார்த்து வருகின்றனர்.
இதேபோல் திருமங்கலம், சேடப்பட்டி, பேரையூர், மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும், மதுரை நகர் பகுதியிலும் கஞ்சா விற்பனை கும்பல் அதிகரித்துள்ளன. போலீசாரும் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா விற்பனை ஓய்ந்த பாடில்லை.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா கும்பல் சிக்கியது. அதன் விபரம் வருமாறு:-
உசிலம்பட்டியில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வத்தலகுண்டு சாலையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வடகாட்டுப்பட்டி குமார் (வயது 40), அன்னம்பாரிபட்டி சவுந்திரபாண்டி (35), வெள்ளைமலைப்பட்டி பாக்கியராஜ் (35), இளங்கோவன் (32), வளையபட்டி ஜெயப்பிரகாஷ் (36), போலக்காபட்டி நரேஷ் (25), செல்லம்பட்டி முத்துராஜா (40), மேனகா (30) என தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 240 கிலோ கஞ்சா, ரூ. 48 ஆயிரம் ரொக்கம், கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :