தூத்துக்குடியில் சுங்க இலாகா கண்காணிப்பாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

by Admin / 30-07-2021 02:31:59pm
தூத்துக்குடியில் சுங்க இலாகா கண்காணிப்பாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை



   
தூத்துக்குடியில் சுங்க இலாகா கண்காணிப்பாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

:தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் தூத்துக்குடியில் சுங்க இலாகா கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

 இவரது மகள் சென்னையில் பல் மருத்துவம் படித்து வருகிறார். அவருக்கு துணையாக கல்யாண சுந்தரத்தின் மனைவி அங்கு உள்ளார்.

எனவே கல்யாண சுந்தரம் மட்டும் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக கடந்த 25-ந் தேதி கல்யாணசுந்தரம் சென்னை புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும். இது குறித்து அவர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ‌ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் உள்ள வயர்கள் வெட்டி விட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை பிரிவு போலீசார் ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி என்.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணபதி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

ஒரே நாளில் 2 வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via