சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் கிராமம்

by Admin / 30-07-2021 02:31:24pm
சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் கிராமம்

 



சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமமே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரும்பபாளையம் கிராமத்தில் வீடு வீடாக சென்று நிதி திரட்டும் கிராம இளைஞர்கள்.
செட்டிபாளையம்:கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.
 
இவருக்கு சாரதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது 2-வது மகன் பிரித்திவிராஜ்(13). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எல்லா சிறுவர்களை போலவும், பிரித்திவிராஜூம் நன்றாக ஓடியாடி மற்ற சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். இப்படி சந்தோ‌ஷமாக சென்ற சிறுவன் பிரித்திவிராஜூன் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுவனுக்கு சளி, இருமல் ஏற்பட்டது. இது சாதாரண இருமல், சளியாக இருக்கலாம் என்று நினைத்தாலும், அவரது பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிறுவனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சளி, இருமல் அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் பயந்து போன சிறுவனின் பெற்றோர் அவரை கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுவன் பிரித்திவிராஜின் இருதயத்தில் உள்ள இரு வால்வுகள் பாதிக்கப்பட்டு இருதயம் செயலிழந்தது இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்டதும், சிறுவனின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி கவலையில் மூழ்கினர். உடனடியாக சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.25 லட்சம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தினம் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் விஜயகுமார் தம்பதியினருக்கு அவ்வளவு பணத்தை எங்கே திரட்டுவது என்ற கவலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறுவனின் உடல்நிலை குறித்த தகவல் குரும்ப பாளையம் கிராமம் முழுவதும் பரவியது. சிறுவனின் நிலைமை மற்றும் அவர்களது குடும்ப சூழ்நிலையை உணர்ந்த ஊர் மக்கள் எப்படியாவது தங்கள் ஊரை சேர்ந்த சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக தங்களால் இயன்ற உதவிகளை சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக செய்ய தொடங்கினர்.

தினமும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிறுவனின் வீட்டிற்கு சென்று தங்களிடம் உள்ள பணத்தை கொடுத்து வந்தனர். மேலும் அப்பகுதி இளைஞர்கள் வீடு, வீடாக சென்றும் நிதி திரட்டினர்.

இதுவரை அந்த ஊர் மக்கள் மட்டும் ரூ.5 லட்சம் நிதியை சிறுவனின் சிகிச்சைக்கு கொடுத்துள்ளனர். ஆனால் தாங்கள் கொடுத்த தொகை போதாது என்று நினைத்த குரும்ப பாளையம் ஊர் மக்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், தங்களுடன் பணிபுரிபவர்களிடம் சிறுவனின் நிலையை எடுத்து கூறி அவர்கள் மூலமும் நிதி திரட்டி வருகிறார்கள்.தந்தை விஜயகுமார், தாய் சாரதாவுடன் சிறுவன்பிரித்திவிராஜ்.

குறிப்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் சிறுவனின் நிலையை பதிவிட்டு அதன் மூலம் நிதிதிரட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

குரும்பபாளையம் ஊர் சார்பில் மட்டும் இதுவரை ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், சில அமைப்புகள் சார்பில் 5 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

இதுவரை பெறப்பட்ட 10 லட்சம் ரூபாயில், ரூபாய் 8 லட்சம் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பணமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு தேவையான மீதமுள்ள பணத்தை திரட்டும் பணியிலும் ஊர் மக்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக முதல்- அமைச்சரின் சிறப்பு பிரிவுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எங்களது மகனுக்கு இருதய செயலிழப்பு இருப்பது தெரிந்ததும் மிகுந்த கவலை அடைந்தோம். அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். எங்களது மகன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட தகவல் வந்த நாள் முதலே எங்களின் வாழ்க்கை நரகமாகி மாறி விட்டது. மகனை காப்பாற்றுவதற்காக நாங்களும் நகை விற்றும் கடன் பெற்றும் ரூ.10 லட்சம் வரை இதுவரை செலவழித்து விட்டோம்.

தற்போது அறுவை சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான பணத்தை திரட்ட போராடி வருகிறோம்.

அப்போது தான் எங்களது ஊரை சேர்ந்தவர்கள் தாங்களாக உதவ முன்வந்து, தங்களால் முடிந்த அளவு பணத்தை எங்களுக்கு கொடுத்தனர். அவர்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் உதவி செய்து வருகின்றனர். எங்களது மகனை காப்பாற்ற இந்த அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Tags :

Share via