ரயில் விபத்தை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு வருடம் தோறும் தேசிய அளவில் "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" என்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்த விருதுக்காக இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வே அளவில் 6 ரயில்வே ஊழியர்கள் 3 ரயில்வே அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மதுரை கோட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக கே.வீரப்பெருமாள் பணியாற்றி வருகிறார். இவர் ரயில் பாதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ரயில் பாதையில் பற்றவைப்பு விரிசல் இருப்பதைக் கண்டார். இந்த பாதையில் சென்னை - தஞ்சாவூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதை அறிந்து உடனடியாக ரயில் பாதையின் எதிர்ப்புறம் ஓடி சிவப்பு கொடியை காட்டி விரைந்து வரும் ரயிலை நிறுத்தினார். இதன் மூலம் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சமயோசித செயலை பாராட்டி இவருக்கு தேசிய விருதான "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" வழங்கப்பட இருக்கிறது.
Tags : ரயில் விபத்தை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது: தெற்கு ரயில்வே அறிவிப்பு