அம்பேத்கர் சிலையை சுற்றி சுவர் -:இருதரப்பு மோதல்

by Editor / 01-08-2021 12:28:45pm
அம்பேத்கர் சிலையை சுற்றி சுவர் -:இருதரப்பு மோதல்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி தாலுகா, ஒதியத்துார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த, ஜூலை, 27ல், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் வெங்கடேசன் தலைமையில், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டத்தில், சிலையை மாற்றி அமைப்பதாக கூறியதால், வரும் ஆக., 4ல், இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதாக, தாசில்தார் தெரிவித்தார்.தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு மேலாக, அம்பேத்கர் சிலையின் முன் மூன்று போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று, ஒரு தரப்பினர், சிலையின் முன் செங்கல், எம்சான்ட் மணல் ஆகியவற்றை கொட்டி வைத்து, சுவர் எழுப்ப முயற்சி செய்தனர்.இதனால், சிலை அமைத்த தரப்பினர், மற்றொரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகரன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பின், சுவர் எழுப்ப கொட்டி வைத்திருந்த மணல், செங்கல்களை அப்புறப்படுத்தினர். எஸ்.ஐ., தலைமையில் 10 போலீசார் என, மொத்தம் 11 போலீசார், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை 24 மணி நேரமும், அம்பேத்கர் சிலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo