முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணி-முதல்வர்

by Editor / 01-08-2021 04:17:53pm
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணி-முதல்வர்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி திட்டங்களை உருவாக்கி அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தமிழக மாணவர்கள் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளில் தகுதிகள், தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும். மேலும் குடும்பத்தில் உள்ள முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலமாக அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்து துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம், போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via