ஜனாதிபதி  5ம் தேதி : நீலகிரி வருகை

by Editor / 01-08-2021 04:10:44pm
 ஜனாதிபதி  5ம் தேதி  : நீலகிரி வருகை

ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 2ம் தேதி சென்னை வருகிறார். அங்கு சட்டமன்றத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, 3ம் தேதி சிறப்பு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவன் மாளிகை செல்கிறார். 4ம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடக்கும் பயிற்சி ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து ஊட்டி ராஜ்பவன் மாளிகை வந்து ஓய்வெடுக்கிறார். 5ம் தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் ஒரு பழங்குடியின கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பைக்காரா படகு இல்லம் செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி 6ம் தேதி ஊட்டியிலிருந்து கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.இது மட்டுமின்றி, ஜனாதிபதி வரும்போது மழை பெய்தால், கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஊட்டிக்கு வர வாய்ப்புள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக 1200 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via