நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை அவமதிக்கின்றனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், எதிர்க்கட்சியினர், ஜனநாயகத்தை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரின் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவைகளை சமுகமாக நடத்துவது குறித்து, மக்களவை சபாநாயகர் தலைமையில் பல முறை ஆலோசனை நடைபெற்றது.
இருப்பினும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. வருகிற 13ஆம் தேதிக்குள் மழைக் காலக் கூட்டத் தொடர் நிறைவடைய உள்ள நிலையில்,
மத்திய அரசை சாடும் விதமாக போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிளில் சென்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்திய அதேநேரத்தில், பிரதமர் மோடியும் பாஜக எம்.பி.க்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது, ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மக்களை அவமதிக்கும் செயல் என எதிர்க்கட்சிகளை சாடினார்.
Tags :