கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி  - ஒருவர் கைது

by Admin / 05-02-2024 11:09:46pm
 கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி  - ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. குறைந்தது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடனாக கொடுக்கும் பணத்திற்கு வட்டியாக வசூல் செய்யும் நிலை உள்ளது. பலரும் வாங்கிய கடன் தொகையை விட பல மடங்கு வட்டி கொடுத்த பின்னரும்:, தொடர்ந்து வட்டி என்ற பெயரில் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதினால் சிலர் ஊரை விட்டு ஒடி விடுகின்றனர். பலர் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் அவல நிலை நாள்தோறும் நடந்தேறும் சூழ்நிலை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கந்த வட்டி கும்பல்களின் தொந்தரவு காரணமாக கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகப்பாண்டி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று மினி;பஸ் ஊழியர் ஆறுமுகப்பாண்டி என்பவரை கந்து வட்டி கும்பல் தாக்கியது.

கந்து வட்டி புகாரில் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருவது மட்டுமின்றி, கந்து வட்டிக்கு விடும் கும்பல்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதால் கந்து வட்டியினால் தற்கொலைகள் அதிகாரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருவது மட்டுமின்றி செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது

.இதற்கு வலு சேர்க்கும் வகையில் கழுகுமலை அருகே ஒரு பெண் கந்து வட்டி கொடுக்கும் தம்பதியினால் தற்கொலை செய்து கொண்டு உயிருக்கு போராடி வரும் சூழ்நிலை உள்ளது.கழுகுமலை உள்ள கரடிகுளம் சி.ஆர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி லோகிஸ்வரி. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் பிரிந்து விட லோகிஸ்வரி தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மகன், மகளுக்கு திருமணமாகிவிட்டது.

தற்போது லோகிஸ்வரி கேரளா மாநில திருச்சூரில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லோகிஸ்வரி சி.ஆர்.காலனியில் உள்ள தனது வீட்டில் கழிவறை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி(66) என்பவரிடம் 30 ஆயிர ரூபாய் கேட்டுள்ளார். முதலில் 10 ஆயிரம் கொடுத்த தங்கப்பாண்டி, ஒரு வெள்ளை பேப்பரில் லோகிஸ்வரி மற்றும் கட்டிட வேலைக்கு வந்த கொத்தனாரிடம் கையெழுத்து பெற்று கொண்டது மட்டுமின்றி, மீதமுள்ள 20 ஆயிரம் வேண்டும் என்றால் நகை அல்லது பத்திரம் இருந்தால் கொடுக்க முடியும் என்று தங்கப்பாண்டி கூறியுள்ளார்.

இதயெடுத்து லோகிஸ்வரி தனது கழுதில் இருந்த 2பவுன் தங்க செயினை கழட்டி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் லோகிஸ்வரியிடம் 20 ஆயிர ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார். அவருடைய நகையை வேறு எங்கோ அடமானம் வைத்து பணத்தினை கொடுத்ததாக தங்கப்பாண்டி கூறியுள்ளார். கேரளாவிற்கு வேலைக்கு சென்றாலும் தங்கப்பாண்டிக்கு வட்டி பணத்தினை லோகிஸ்வரி தவறால் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஊருக்கு திரும்பிய லோகிஸ்வரி அசல் பணத்தினை தருகிறேன், தனது நகையை கொடுக்கும் படி தங்கப்பாண்டியிடம் கேட்டுள்ளார்.  அதற்கு அசல் வட்டி சேர்த்து 90 ஆயிரம் வந்து விட்டது. எனவே 90 ஆயிரம் கொடுத்தால் தான் நகையை திருப்பி தரமுடியும் என்று கூறியுள்ளார். இதையெடுத்து லோகிஸ்வரி மற்றும் அவரது மருமகள் சத்யா இருவரும் மகளிர் குழுவில் லோன் எடுத்து கடந்த மாதம் 31.ந்தேதி புதன்கிழமை அன்று 90 ஆயிர ரூபாயை தங்கப்பாண்டியிடம் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் நகையை திருப்பி கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி சென்றவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. லோகிஸ்வரி மற்றும் அவரது மருமகள் சத்யா இருவரும் பல்முறை அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய போதும் அவர் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையெடுத்து லோகிஸ்வரி அவரது வீட்டிற்கு சென்ற போது, தங்கப்பாண்டியன் மனைவி வள்ளியம்மாள் மட்டும் இருந்துள்ளார். லோகிஸ்வரி தனது நகை பற்றி கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் லோகிஸ்வரியை தொடர்பு கொண்ட தங்கப்பாண்டி வங்கி மூடி விட்டதாக நாளை எடுத்து தருவதாக கூறியள்ளார். மறுநாள் கேட்டதற்கு மேலும் 35 ஆயிர ரூபாய் கொடுத்தால் தான் நகையை தருவேன், இல்லையென்றால் தரமாட்டேன் என்று தங்கப்பாண்டி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகிஸ்வரி, தங்கப்பாண்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவரது மனைவி வள்ளிமயில் அவதூறாக பேசி வெளியே அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து போன லோகிஸ்வரி தொடர்ச்சியாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.தன்னுடைய நகையை கேட்டு மீண்டும் லோகிஸ்வரி, அவரது மருமகள் சரண்யா இருவரும் தங்கப்பாண்டி வீட்டிற்கு சென்று கேட்க சென்றுள்ளார். தங்கப்பாண்டி வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

அருகில் இருந்த வீட்டில் தங்கப்பாண்டி மனைவி வள்ளிமயில் இருந்துள்ளார். அவரிடம் தனது நகையை லோகிஸ்வரி கேட்டதற்கு, நகை எதுவும் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை செய் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த லோகிஸ்வரி ஏற்கனவே தனது கையில் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு லோகிஸ்வரி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் தற்கொலை முயற்சிக்கு முன்பு லோகிஸ்வரி தனக்கு நடத்த பிரச்சினைகள் குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

 கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி  - ஒருவர் கைது
 

Tags :

Share via