கேரளாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்- இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

by Admin / 04-08-2021 01:02:37pm
கேரளாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்- இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு



   
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கேரளாவில் கொரோனா பரவலின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
 
நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் தினமும் 50 சதவீதத்திற்கும் மேலான பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 23,676 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை அங்கு கொரோனாவுக்கு 17 ஆயிரத்து 103 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 148 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழுவினர் கேரளாவுக்கு சென்றனர்.

ஆய்வுக்கு பின் அவர்கள் அளித்த அறிக்கையில் கேரளாவில் கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவோர் அலட்சியமாக இருப்பதால் தொற்று பாதிப்பு குறையவில்லை என்றும், இதன் மூலமே பரவல் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே கேரளாவில் வீட்டு தனிமையில் இருப்போரை தீவிரமாக கண்காணித்து அவர்களால் நோய் பரவல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவை கொண்டாட கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவிக்க அரசு முன்வந்துள்ளது.

முதல்-மந்திரி பினராயி விஜயன்

அதன்படி கேரளா முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் சனிக்கிழமைகளில் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரளாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதற்கு டாக்டர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கொரோனாபரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவித்தால் அது, தொற்று பரவலை அதிகரிக்க செய்யும் என்றும், எனவே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க கூடாது எனவும் தெரிவித்து உள்ளனர்.

 

Tags :

Share via