சுதந்திர தின விழாக்களில் அதிக கூட்டம் வேண்டாம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

by Admin / 04-08-2021 01:04:15pm
சுதந்திர தின விழாக்களில் அதிக கூட்டம் வேண்டாம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்



சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்.

தமிழ்நாட்டில் அரசு சார்பில் கோட்டையில் சுதந்திர தினவிழா நடைபெறும். இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.

இதேபோல மாநில அளவில் அனைத்து மாநில முதல்- மந்திரிகளும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக மத்திய உள்துறையில் இருந்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பரவல் நீடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தினவிழா நடப்பதால் நோய் தொற்று மேலும் பரவிவிடும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கொரோனா எதிர்ப்பில் போராடிய டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை சுதந்திர தின விழாவில் கவுரவிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுத்து விழாவில் பங்கேற்க செய்யலாம். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.

தேச பக்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மக்களிடம் பரப்ப வேண்டும். தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

முக்கிய இடங்கள், முக்கிய பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.

‘ஆத்மநிர்பார் பாரத்’ பொருளாதார திட்டம் போன்றவற்றை மக்களிடம் பரப்பும் வகையில் பிரசாரங்கள் செய்யப்பட வேண்டும். விழா கொண்டாடப்படும் இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, கட்டாயமாக முககவசம் அணிதல், அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

 

Tags :

Share via