கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் இன்றியமையாதது

by Admin / 04-08-2021 02:27:30pm
கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் இன்றியமையாதது


தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும்.

சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
தாய்ப்பால் வார விழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளரும்போது உடல்பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக்குறைவு.

குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை, தேன், கழுதைப்பால், புட்டிப்பால் கொடுக்க கூடாது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தையை பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. அதனால் குழந்தைக்கு கட்டாயம் சீம்பாலை கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிக இன்றியமையாததாகும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கீரை, பருப்பு, பால், காய்கறி வகைகளை சாப்பிடுதல் அவசியமாகும். தாய்ப்பால் கொடுக்கும் முன் பால், பழச்சாறு அல்லது நீர் ஆகாரமும் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது. தாய்க்கு மனக்கவலை அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பது குறையும். அதனால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

 

 

Tags :

Share via