கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி- 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாய்  மோசடி நபர் கைது

by Admin / 28-04-2024 01:50:29pm
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி- 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாய்  மோசடி நபர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் பாண்டி என்பவரின் மொபைல் நம்பரில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் ஐ.எம்.ஓ. (imo) செயலி மூலம் மதம் மாறுவதற்காக பத்து கோடி தருவதாக கூறி..... 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாய் நூதன முறையில் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீசார் குற்றவாளி தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜவேல் (31) என்பவரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர்  முத்து மாரியப்பன் மகன் விக்னேஷ் பாண்டி. வயது 28. இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த டிசம்பர் மாதம் விக்னேஷ் பாண்டியை  ஐ. எம். ஓ. என்ற செயலி மூலம் சொக்கநாதன் என்ற ஐ.டி.யில் இருந்து தொடர்பு கொண்ட நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூபாய் 10 கோடி தருவதாக கூறியுள்ளார் மேலும் அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கவும் வருமான வரி செலுத்தவும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி விக்னேஷ் பாண்டி தனது அக்கவுண்டில் இருந்து ஜீ.பே. மூலமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் மொத்தம் 35 நாள்களில் அடுத்தடுத்து 20 தவனையாக ரூபாய் 4 லட்சத்து 88 ஆயிரத்து 159  அனுப்பியுள்ளார். பின்னர் இது மோசடி என்று தெரிய வரவே நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் புகார் செய்துள்ளார்.  தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை பிடிப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர் இதில் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ஆனந்தம் நகர் பகுதியைச் சார்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் ராஜவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via