காக்கை, குருவி எங்கள் ஜாதி.. பாரதியின் பாடலை மெய்ப்பிக்கும் மனித நேயம்...

by Admin / 08-08-2021 01:44:32pm
காக்கை, குருவி எங்கள் ஜாதி.. பாரதியின் பாடலை மெய்ப்பிக்கும் மனித நேயம்...

உணவுக்காக வீடு தேடி தினம் வரும் குரங்கு, மயில், உணவருந்திவிட்டு சற்று இளைப்பாரி விட்டு செல்கிறது.
 
விராலிமலை மத்தியில் அமைந்துள்ள முருகன் மலைக்கோயில் வனங்கள் நிறைந்த பகுதியாகும், அங்கு மயில். குரங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் பல வாழ்ந்து வருகின்றன, வனத்துறை மற்றும் அறநிலையத் துறையினரின் பராமரிப்பு இல்லாததால் உணவு, குடிநீருக்கு அவைகள் மலையை விட்டு வெளியே வருகின்றன.

இதில் சில மயில், குரங்குகள் மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் சுண்டல், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றன. இதனால் சில உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியில் வந்து உணவுக்காக அல்லாடி வருகின்றன.
 
இந்த நிலையில் அம்மலைக்கு அருகே வசித்து வரும் முருகேசன் என்பவரது வீட்டிற்கு தினமும் காலை ஒரு வயதான குரங்கு வருகிறது. இதேபோல் மாலை வேளையில் மயில்கள் சில வருகின்றன அதை விருந்தாளி போல் வரவேற்கும் அவர் முதலில் குடிக்க நீர் தருகிறார்.

பின்னர் வீட்டிற்குள் அழைத்து சென்று தன் குழந்தையை போல அருகில் அமரவைத்து அதற்கு உணவாக பொட்டுக்கடலை, பொரிகடலை உள்ளிட்ட தானிய வகைகளை வழங்குகிறார்.

அதை அருந்திய அந்த குரங்கு சற்று நேரம் வீட்டு வாசலில் அமர்ந்து  ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் மீண்டும் மலைக்குள் சென்று விடுகிறது. தினமும் காலையில் வீடுதேடி வரும் இந்தக் குரங்கு, மயிலுக்கு தினம் உணவளித்து வருகிறார் முருகேசன்.

மனிதர்கள் வாழ்வதற்கு செயற்கையாக வாழ்விடங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், விலங்கினங்களும் தாவர இனங்களும் வாழும் இடங்களை செயற்கையாக உருவாக்க முடியாது.

மனிதனும், இயற்கையும் நிலைத்திருப்பதற்கு பல்லுயிர் பெருக்கம் அவசியம். அந்தப் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதனின் கடமை.

கொரோனா பெருந்தொற்று அதனால் ஊரடங்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும் இவரின் இந்த  மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.

 

Tags :

Share via