நூதன முறையில் பணம் திருடியதாக 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள கடைகளில் சில நபர்கள் உணவு அருந்திவிட்டு கடை உரிமையாளர்கள், கல்லாவில் அமர்ந்திருப்பவர்கள் கவனத்தை திசை திருப்பி ரூ. 100 கொடுத்து ரூ. 500 கொடுத்ததாகக் கூறி சில்லறை பெற்றுச் செல்வதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார் அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வந்தனர். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி சுடலை மாடன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த 2 பெண் உள்பட 4 பேரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் தான் மற்ற கடைகளிலும் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யங்கோவில்பட்டியைச் சேர்ந்த குரும்பன்(60), அவரது மனைவி முனியம்மாள்(50), அவர்களது உறவினர்கள் பிச்சையா(59), மொக்கத்தாய்(55) ஆகியோர் என்பதும், திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குடும்ப பங்கான தோற்றத்தில் ஆண்கள் வேஷ்டி சட்டையிலும் பெண்கள் சேலையிலும் வலம் வந்து தாங்கள் உண்ணும் உணவிற்கு பணம் கொடுப்பது போன்று 100 ரூபாய் கொடுத்தால் தாங்கள் 500 ரூபாய் கொடுத்ததாகவும் மீதி சில்லறை வேண்டும் என கேட்டு வாங்கி நூதன முறையில் பணம் திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார் ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் அவர்கள் மீது தேனி மாவட்டத்தில் ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆலங்குளம் பகுதிகளில் கடைகளில் பணம் கொடுப்பது போன்று கொடுத்துவிட்டு அதிக அளவில் பணத்தை திரும்ப பெற்று நூதன முறையில் ஈடுபட்ட நான்கு பேர் கும்பலின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :