குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலகியது.மழை தொடர்கிறது.

by Editor / 23-05-2024 08:10:44pm
குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலகியது.மழை தொடர்கிறது.

தென்காசிமாவட்டத்தில்சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்  ஏ.கே.கமல்கிஷோர்  அறிவிப்பு.
  தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் இதர அருவிகளில் பெரு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி  மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள இதர சுற்றுலா பகுதிகளில் பொது மக்கள் நீராட ஏற்கனவே தடை செய்து ஆணையிடப்பட்டது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று (23.05.2024) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடைகளை விலக்கி கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும்,பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (24.05.2024) பிற்பகல் 4.00 மணி முதல்  சுற்றுலா பயணிகள் நீராட அனுமதிக்கப்படும். பழைய குற்றால அருவியில் (24.05.2024) முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நீராட அனுமதிக்கப்படும். பழைய குற்றால பகுதியில் வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனம் நிறுத்தப்பட வேண்டும். ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது.அணைக்கட்டு பகுதிகளில் நீராட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவி பகுதிகளில் நீராட செல்லும் போதுபிரதான அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சோப், சாம்பு, எண்ணெய் பயன்படுத்த கூடாது.அருவி பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக் பயன்படுத்திட அனுமதி இல்லை.குடி போதையில் எவரும் அருவி பகுதியில் நீராட அனுமதி இல்லை.காவல் துறை மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை பொது மக்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குற்றாலம் அருவி பகுதியில் நீராட வழங்கப்பட்டுள்ள அனுமதி சென்னை வானிலை மைய அறிவிப்பு மற்றும் கனமழையினை பொருத்து அவ்வப்போது மாறுதல்கள் செய்யப்படும் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் இருந்துவருவதால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

Tags : குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை விலகியது.மழை தொடர்கிறது.

Share via