குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு. 

by Editor / 14-06-2024 10:07:06pm
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு. 

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த வானரமுட்டி சேர்ந்த மாரியப்பன் சடலம் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பனும் ஒருவர். 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் ஆம்புலன்ஸ் மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து அவரது சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சரவணப் பெருமாள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி,,வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால், மற்றும் அரசியல் கட்சியினர் , சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து அவரது சடலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசியல் கட்சியினர்,கிராம மக்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது சடலத்துக்கு மகன் கதிர்நிலவன் சிதைக்கு தீ மூட்டினார்.

 

Tags : குவைத் தீ விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு. 

Share via