மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு 

by Editor / 26-06-2024 12:00:28am
மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு 

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்து ரேபரேலி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மக்களவையில் இன்று உறுப்பினராகவும் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 26) அறிவித்தார். மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், ”மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, இடைக்கால மக்களவைத் தலைவர் பா்த்ருஹரி மகதாப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்ற நிர்வாகிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

 

Tags : மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு 

Share via