தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் 2 பேர் கைது.முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7பேருக்கு போலீஸ் வலை வீச்சு.

திருவாரூர் அருகில் உள்ள தப்ளாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடுகள் மற்றும் கையாடல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தப்ளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவைக் ஏற்கனவே கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுருந்தார்.
அந்த உத்தரவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு மேலாண்மை செய்வதில் தொடர்ந்து தவறியதாகவும் நிர்வாக குழுவின் கடமைகளை செய்து முடிப்பதில் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக 01.4.2018 முதல் 31.03.2021 வரை 53 லட்சத்து 34 ஆயிரத்து 108 ரூபாய் கையாடல் செய்துள்ளதாகவும் இதனால் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 42 லட்சத்து 50 ஆயிரத்து 361 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேமிப்பு கணக்கில் பட்டுவாடா செய்ததாக பொய் கணக்கு எழுதியது,விவசாய கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்கியதாக முறைகேடு பயிர் காப்பீடு மோசடி மளிகை தொகுப்பு வழங்கியதாக பொய் கணக்கு எழுதியது அங்காடி விற்பனைத் தொகையை செலுத்தாதது எந்த விபரமும் இல்லாமல் செலவு எழுதியது போன்றவற்றில் மொத்தமாக 53 லட்சத்து 34 ஆயிரத்து 108 ரூபாய் கையாடல் செய்துள்ளதாகவும் இதனால் சங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு 42 லட்சத்து 50 ஆயிரத்து 361 ரூபாய் என மொத்தம் 95 லட்சத்து 84 ஆயிரத்து 469 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை காரணம் காட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ரவி நிர்வாக இயக்குனர்கள் ரஹ்மத்துல்லாஹ் ராமச்சந்திரன் தண்டபாணி வீராச்சாமி பக்கிரி சாமி பாலாஜி சாந்தா விஜயலட்சுமி விமலா உள்ளிட்ட நிர்வாக குழுவினரின் 10 பேரின் பதவிகளை கூண்டோடு கலைத்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா கடந்த ஜனவரி மாதம் 2023ல் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் இந்த வழக்கு கையில் எடுக்கப்பட்டு தப்ளாம்புலியூர் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ரவி முன்னாள் செயலாளர் அசோக்குமார் கிராம நிர்வாக அலுவலர் லதா லதாவின் மகன்கள் கிஷோர்குமார் தினேஷ்குமார் முன்னாள் தலைவர் ரவியின் அண்ணன் மனைவி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் விஜயா ராணி தப்ளாம் புலியூரை சேர்ந்த முருகேஷ் தப்ளாம் புலியூர் கூட்டுறவு கடன் சங்க அலுவலக உதவியாளர் காளிதாஸ் மற்றும் செயலாளர் ராஜசேகர் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அலுவலக உதவியாளர் காளிதாஸ் மற்றும் செயலாளர் ராஜசேகர் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் 2 பேர் கைது.முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7பேருக்கு போலீஸ் வலை வீச்சு.