தலைவாசல் அருகே வேட்டை வீட்டில் பதுக்கிய மான் தலை, தோல் பறிமுதல்: தலைமறைவான விவசாயிக்கு வலை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் குமாரபாளையம் பகுதியில் வீட்டில் மான் கறி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், ஆத்தூர் வனச்சரகர் செந்தில் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, தமிழரசன்(42) என்பவரின் வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
உடனே, அங்கு நடத்திய சோதனையில் மான் தோல் மற்றும் தலை உள்ளிட்ட உருப்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். முன்னதாக வனத்துறையினர் வருவதை அறிந்ததும் தமிழரசன் தலைமறைவாகி விட்டார். அவரை, வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்.
விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது. விவசாயியான தமிழரசன், அருகில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வரும் மான்களை வேட்டையாடி வந்துள்ளார்.
அதன் மாமிசத்தை கூறுபோட்டு விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழரசனை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர், வெளியே வந்த தமிழரசன் நாளடைவில் மான் தலை உள்ளிட்ட உறுப்புகளை பாடம் செய்து விற்று வந்துள்ளார். அதில், நல்ல வருமானம் கிடைக்கவே தொடர்ந்து மான் வேட்டையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மீது போலி மணல் தயாரித்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :