ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்.. கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு...

by Admin / 12-08-2021 12:27:20pm
ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்.. கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு...

லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து காட்டூர்-தத்தமஞ்சி நீர்தேக்கத்திற்கு ₹90 லட்சம்  மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரங்கள் சிறைபிடித்து  கிராம மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், காட்டூர்-தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளுக்காக ஆரணி ஆற்றில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து குமரசிரளப்பாக்கம் ஏரி வழியாக 8 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் மூலம் உபரி நீரை கொண்டு செல்ல
₹90 லட்சம்  மதிப்பில் இருபுறங்களிலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கரைகள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஒருபுறம் 100 மீட்டர் அகலத்திலும், மற்றொரு புறம் 6 மீட்டர். அகலத்திலும் பணிகள் நடைபெறுவதாகவும், மழைநீர் வடிந்து செல்ல வடிகால் பாலம் சீராக கரைகளையும் அமைக்காததால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் போதிய நீரின்றி பாதிக்கப்படும் எனவும்,  கனமழை காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பணி மேற்கொண்ட ஜேசிபி இயந்திரங்களை வேளூர் கிராம  மக்கள்  சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி வடிநிலக் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகுமாரி, கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடியாக பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.மேலும், வருவாய் துறையினர் முறையாக நிலங்களை அளந்த பின், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் தொடங்கப்படும் என கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

 

Tags :

Share via