நடத்தையில் சந்தேகம்; மனைவியை குத்திக்கொன்ற கணவர் கைது
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு வேல்முருகன் (13) என்ற மகன் உள்ளான்.
சுரேஷ் தனது குடும்பத்துடன் மனைவியின் ஊரான அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சுரேஷ் சந்தேகப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனைவியின் மீது கோபத்தில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சுரேஷ் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். ஆனால் மனைவி வர மறுத்து பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்க சென்றார். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் இருந்த சுரேஷ் தன்னுடன் உறவுக்கு வர மறுத்தது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை தூங்கி எழுந்ததும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர்.
Tags :



















