கந்துவட்டி தொல்லையால் விவசாயி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). விவசாயி. இவா், கந்துவட்டி தொல்லையால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாகக் குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டாா்.தகவல் அறிந்ததும் வேலூா் காவல் துறையினா் சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மணிகண்டனின் மனைவி, வேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவா் மணிகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விவசாய தேவைக்காக பவா்டில்லா் இயந்திரம் வாங்க அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 3. 50 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். அதற்கான வட்டியை அவா் முறையாகச் செலுத்தி வந்தாா். அத்துடன் எனது கணவா் வேறு நபா்களுக்கும் பரிந்துரை செய்து கடன் வாங்கி கொடுத்துள்ளாா். ஆனால், கடன் வாங்கியவா்கள் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவா், எனது கணவரை மிரட்டியதோடு எங்கள் வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டனா். இதனால் மனமுடைந்து எனது கணவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே மணிகண்டனை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் வேலூா், அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Tags :