கோவை, நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.
மேயர் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து மேயர் ராஜினாமா செய்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் 5-ம் தேதி நடக்க உள்ள நிலையில், நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். இதனால், காலியாக உள்ள கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவை மேயர் பதவியை பிடிக்க 6 பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கோவை திமுகவில் பரீட்சயமான முகமான 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 34வது வார்டு கவுன்சிலர் மாலதி, எம்.பி கனிமொழி மூலம் மேயர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 36வது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரும் கோவை மேயர் போட்டியில் உள்ளனர்.
Tags : கோவை, நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.