கைசாலாவில் இருந்து மதுரை திரும்புவாரா நித்யானந்தா? மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி என அறிக்கை வெளியீடு..!கைது செய்யப்படுவாரா நித்தியானந்தா..?

by Admin / 13-08-2021 01:19:12pm
கைசாலாவில் இருந்து மதுரை திரும்புவாரா நித்யானந்தா? மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி என அறிக்கை வெளியீடு..!கைது செய்யப்படுவாரா நித்தியானந்தா..?

சச்சரவுக்கு பெயர் போனவர் என்றால் அவர் நித்தியானந்தா தான். ஒரு காலகட்டத்தில் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி அறிவிக்கப்பட்டு பிறகு ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளால் வாபஸ் பெறப்பட்டது. அதன் பிறகு தனது சொந்த தியான பீடம் என்ற ஒரு ஆதினத்தை வாணியம்பாடியில் உருவாக்கி மக்களுக்கு சத்சங்கம் நடத்தி வந்தார். பின்னர் ஏற்பட்ட பல்வேறு கட்ட பிரச்னைகளால், தற்போது கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி நான் தான் என இவர் வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரையும் திடுக்கிடச் செய்திருக்கிறது. யார் இந்த நித்யானந்தா? தனி நாடு தனி கொடி தனி பாஸ்போர்ட் என இவரது சாம்ராஜ்யம் உருவானது எப்படி? பார்க்கலாம்...

1978ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் திருவண்ணாமலையில் பிறந்தவர் ராஜசேகர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரையும், அதன்பின், அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயின்றவர். தனது 12-வது வயதில், அருணாச்சல மலை அடிவாரத்தில் 1990-களில் ஒரு புத்த பூர்ணிமா அன்று உடல் தாண்டி அனுபவம் என்ற பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்ததாக அவரே பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். ராம கிருஷ் ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்.

அங்கு மற்றவர்களை முந்திக் கொண்டு தக்கல் முறையில் தனக்கு தீட்சை தரவேண்டும் என கூறிய அவர், அதுபோன்ற வழக்கம் இங்கில்லை என ராமகிருஷ்ண மடத்தில் கூற, அங்கிருந்து வெளியேறி,  திருச்செங்கோடு, ஈரோடு பகு திகளில் தங்கி  பக்தர்களு க்கு அருளாசி வழங்கி வந்தார். பிறகு இமயமலைக்கு புறப்பட்டு அங்கு பல கடுமையான தவநிலைக்கு பிறகு ஞான அனுபூதி முக்தி என்னும் நிலையை 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பெற்றதாக கூறிக் கொண்ட ராஜசேகர், தியான பீடம் என்ற சேவை நிறுவனத் தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இமயமலையில் தியானத்தில் இருந்த போது அங்கிருந்த ஒரு போதகர், இவருக்கு பரமஹம்ச நித்தியானந்தா எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த தியான பீட நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துகளுடன் பரந்து விரிந்திருக்கிறது.

கழுத்தில் ருத்ராட்சம், ஒரு காவி கோவணம், கையில் கலச குண்டலம் என சுவாமிகளுக்கு மத்தியில், மை முதல் லேப்டாப் என ஹைடெக் சாமியாராக வலம் வந்தார் நித்தியானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவும் தனி அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று 2010-ம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காவி உடையில், சாமியார் எனக் கூறிக் கொண்டு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது சரியல்ல என மக்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த வீடியோவில் இருந்தது நாங்கள் அல்ல என்றும், காட்சிகள் அனைத்தும் போலியானவை என்றும் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதன் பிறகு 2013-ம் ஆண்டு நித்தியானந்தத்திடம் தீட்சைப் பெற்று சன்னியாசி ஆகினார் ரஞ்சிதா.

தமிழ்நாட்டின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக 1980-ம் ஆண்டு முதல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். அப்போது மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததால், டிசம்பர் மாதம் 19-ம் தேதி அன்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார். நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதற்கிடையில் பெங்களூரு சென்று செட்டில் ஆன நித்தியானந்தா, அங்கு இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக பயன்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2019-ம் ஆண்டு அதேபோல பெங்களூருவில் அவர் நடத்தி வந்த பிடதி என்ற ஆசிரமத்தில் அமெரிக்கா வாழ் பெண் ஒருவர், நித்தியானந்தா மீது பாலியல் புகார் அளித்தார். அதேபோல அகமதாபாத் ஆசிரமத்திலும் சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாகவும், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணி நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர், சிறிது காலத்திற்கு பிறகு காணமலேயே போனார். எங்காவது சென்று ஒளிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் அருகே தனி தீவு ஒன்றில் ஒரு நாட்டையே உருவாக்கி அனைவரையும் அசர வைத்தார் நித்தியானந்தா. கைலாசா என அந்நாட்டிற்கு பெயரிட்ட அவர், தினந்தோறும் அங்கிருந்த படியே யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கைலாசாவிற்கென தனி கொடி, பணம், பாஸ்போர்ட் என பில்டப் ஏற்றிக்கொண்டே சென்ற அவர், அங்கு நடைபெறும் விழாக்களில் அழகிய பெண்கள் நடனமாடும் காட்சிகளும் வெளியாகி வெறுப்பை ஏற்றினார்.

இன்று வரை அவர் எங்கிருக்கிறார்? ஏன் அவர் கைது செய்யப்படாமல் இருக்கிறார் என்பது கேள்விக்குறியே.. சிறிது காலம் அமைதியாக இருந்த வந்த நித்தியானந்தா தற்போது முகநூலில் வெளியிட்ட ஒரு அறிக்கை தான், மீண்டும் அவரது கதையை யோசிக்க வைத்திருக்கிறது. மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து வருகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்ட நித்தியானந்தா.. மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், "ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாக" வும் தெரிவித்துள்ளார். ஆதீன மடத்தின் சொத்துக்கள் பலவற்றை குத்தகைக்கு கொடுத்த விவகார வழக்குகளும் உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக குறிப்பிட்டு நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதீன மடமோ அல்லது, அறநிலைய துறையோ உரிய விளக்கம் அளித்து மடாதிபதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

ஒருவேளை தன்னை மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக நிரூபிப்பதற்காக மீண்டும் நித்தியானந்தா தமிழகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது. அப்படி அவர் தமிழகம் வந்தால் கைது செய்யப்படுவரா? அல்லது மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக செயல்படுவாரா என்பது அந்த மீனாட்சிக்கே வெளிச்சம்..!
 

 

Tags :

Share via