20 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை

by Admin / 14-08-2021 01:58:45pm
20 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து - சுகாதாரத்துறை நடவடிக்கை

கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போது ஒருசில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்து உள்ளது.

ஒவ்வொரு மருத்துவ சிகிச்சையை பொறுத்து இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணத்திற்கு கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போது ஒருசில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

மேலும் மருத்துவ கட்டணத்தை செலுத்திய பிறகு தான் இறந்தவர்கள் உடலை தருவது என்றும் கூறினார்கள். இது பற்றிய புகாரின் பேரில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது. தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 20 தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒரு கோடியே 87 லட்சம் நோயாளிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளி குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன் கூறுகையில், தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்ததாக 222 புகார்கள் மே முதல் வாரத்தில் வந்தன.

சென்னையில் உள்ள 92 மருத்துவமனைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கூடுதல் கட்டணம் மற்றும் கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் சிகிச்சை அளித்தல் போன்றவை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

 

Tags :

Share via