பிளஸ்-2 பொதுத் தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, அதில், 12-ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்க இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடக்க இருப்பதால், அதற்கு மறுநாள் நடைபெற இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வு தேதியை மட்டும் மாற்றி அரசுத் தேர்வுத்துறை நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதுதவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த பொதுத் தேர்வை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜெயந்தி (பாடநூல் கழகத் இயக்குனர்), லதா (சமக்ரா சிக்ஷா திட்ட இயக்குனர்), அமிர்தஜோதி (சமக்ரா சிக்ஷா திட்ட உதவி இயக்குனர்), நிர்மல்ராஜ் (ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்) நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் மாவட்டந்தோறும் பொதுத்தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :