பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கைது.
இன்று அதிகாலையில் திடீரென பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அந்த கல்லூரியில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த மாணவர்கள் பிடிபட்டனர்.பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விடுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் சுமார் 1000 போலீசார் இன்று காலை திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு இன்று காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அதிரடி சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், பாங், ஹூக்கா மெஷின், ஹூக்கா பவுடர், ஊசிகள், பெர்ஃபியூம்,போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொத்தேரி பகுதி தனியார் விடுதிகளில் கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்,மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்து 60 இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை மறைமலைநகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கைது.