ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கொரியர் மூலம் 24 கிலோ கஞ்சா கடத்தல்  பெண் உட்பட இருவர் கைது: 

by Editor / 25-09-2024 12:00:22am
 ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கொரியர் மூலம் 24 கிலோ கஞ்சா கடத்தல்  பெண் உட்பட இருவர் கைது: 

மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் (ப்ரொபஷனல்) கொரியர் தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்   பகுதியில் இருந்து ஜஸ்வா என்ற பெயரில் மதுரை சிம்மக்கல் விக்கி என்ற பெயரில்  பார்சல் வந்துள்ளது 

அந்தப் பார்சலில் பொம்மைகள் என குறிப்பிடப்பட்டிருந்ததோடு முழு முகவரி இல்லாமல் இருந்ததால் பார்சலில் இருந்த செல்போன் எண்ணுக்கு கொரியர் ஊழியர்கள் தொடர்பு கொண்டு பேசியபோது   போனில் பேசிய நபர் தான் இருக்கும் இடத்திற்கு நேரடியாக வந்து தாருங்கள் என கூறிய போது முறையான முகவரி தாருங்கள் என கொரியர் ஊழியர்கள் கூறியுள்ளனர்.  மறுமுனையில் பேசிய நபர் விலாசத்தை சொல்லாமல் தம் நிற்கும் இடத்திற்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு  தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார் 

இதனால் சந்தேகமடைந்த கொரியர் நிறுவன ஊழியர்கள் பார்சலை தூக்கிப் பார்த்தபோது பொம்மை என எழுதப்பட்டிருந்த பார்சலில் எப்படி இவ்வளவு  எடை இருக்கிறது என  கூறி மதுரை S.S காலனி காவல் நிலையத்திற்கு கொரியர் நிறுவன மேலாளர் தகவல் அளித்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் 12 பார்சல்களில் மரப்பெட்டிக்குள்  தனித்தனி பார்சலில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது 

ஒவ்வொரு பார்சலிலும் சுமார் 2கிலோ 50கிராம் அளவிற்கு கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து வருவாய்த்துறையினர் முன்பாக 24 கிலோ 200 கிராம் எடை கஞ்சாவை பறிமுதல் செய்த  காவல்துறையினர் பார்சலில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி ஆந்திராவில் இருந்து கொரியர் மூலமாக கஞ்சாவை கடத்திய மதுரை மாநகர் செல்லூர் அய்யனார் கோவில் பகுதியை  செல்லவீரு (27) மற்றும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த திருக்கம்மாள் (45) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

மதுரையில் கொரியர் பார்சல் மூலம் பொம்மை என கூறி கஞ்சாவை கடத்திய நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு காவல் ஆய்வாளர் காசி மற்றும் SS காலனி காவல்துறை யினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.

ஏற்கனவே கஞ்சா கடத்தலை தடுப்பது தொடர்பாக கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் உள்ளிட்டோருடன் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. 

அதன் விளைவாக கொரியர் மூலமாக கஞ்சா கடத்தப்பட்ட சம்பவத்தில் கொரியர் நிறுவனத்தினர் விழிப்புடன் செயல்பட்டு காவல்துறையினருக்கு அளித்த தகவலால் மிகப்பெரிய கஞ்சா கடத்தலை தடுப்பதற்கு உதவியதாக அமைந்துள்ளது என்றனர்.

இதுபோன்று கொரியர் மூலமாக மதுரையில்  வேறு ஏதேனும் பகுதிகளுக்கு கஞ்சா கடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதோடு,  இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :  ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கொரியர் மூலம் 24 கிலோ கஞ்சா கடத்தல்  பெண் உட்பட இருவர் கைது: 

Share via