சபரிமலை பூஜை காலம்: இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி

by Editor / 06-10-2024 11:06:39pm
சபரிமலை பூஜை காலம்: இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி

சபரிமலையில் நடப்பாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்; நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சபரிமலையில் நடப்பாண்டு பூஜை காலத்தில் இணையவழி பதிவு மூலம் மட்டுமே பக்தா்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பக்தா்களின் அதிக கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும். இணையவழி முன்பதிவின்போது, யாத்திரை பாதையை தோ்வு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும். நடப்பாண்டு நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சபரிமலை மற்றும் வாகன நிறுத்தமிட சாலைகளின் பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சபரிமலை பூஜை காலம்: இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி

Share via